ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அழிக்கப்பட்ட கோலத்துக்கு பதிலாக, கோயில் நிர்வாகம் சார்பில் ரங்கோலி கோலங்கள் புதிதாக வரையப்பட்டுள்ளன
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண வைபவ விழாவிற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பு கலவையால் வரையப்பட்டிருந்தது. இந்த கோலங்கள் கட்சி சின்னமாக கருதப்படும் எனக்கூறி, வெள்ளை சுண்ணாம்பு பூசி கோலங்கள் மறைக்கப்பட்டது. கோயிலில் போடப்பட்ட கோலங்கள் மறைக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, மத நம்பிக்கை அடிப்படையில் வரையப்பட்ட கோலத்தை கட்சி சின்னமாக கருதி அழித்த அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கிறேன். தேர்தல் சின்னம் இடம் பெறக் கூடாது என்றால் கையை அகற்றி விடுவீர்களா. சூரியனை மறைத்து விடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அழிக்கப்பட்ட கோலத்துக்கு பதிலாக, கோயில் நிர்வாகம் சார்பில் ரங்கோலி கோலங்கள் புதிதாக வரையப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திவ்யத் திருத்தலங்களில் ஒன்று. 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால் தாமரை மலர்களைக் கோலமாக வரைந்து வரவேற்பது இத்திருத்தலத்தில் உள்ள நடைமுறைகளில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.