சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொன்முடி, 2006 -2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கல்வித்துறை அமைச்சராகவும் கனிமவளத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருடன் மணிவண்ணன் என்பவரும் குற்றம்சாட்டப்பட்டனர்.
எம்.பி. எம்.எல்.ஏ. க்களுக்கான வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2016 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீடு மனு நீதிபதி ஜெயசீலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வருமான வரிக் கணக்குகள், சொத்துவிவரங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 39 சாட்சிகளையும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்த வாதங்களையும் ஏற்க மறுத்தது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துவிட்டு மூவரையும் தண்டிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பொன்முடியின் மனைவி வருமானத்தை பொன்முடியின் வருமானமாக சேர்த்து கணக்கிட்டுள்ளார்கள். மனைவிக்கு சொந்தமாக தனியாக விவசாய நிலங்கள் உள்ளன. அதில் கிடைத்த வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை பதிவு செய்துள்ளது. அதை சரியாக புரிந்துகொண்டு சிறப்பு நீதிமன்றம் சரியான உத்தரவைதான் பிறப்பித்திருந்தது, அந்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்த வழக்கிற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி தற்போது அளித்துள்ள தீர்ப்பில், “வருமான வரிக்கணக்கு வங்கி பாஸ் புக் கணக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவு தவறானது, செல்லாது” என கூறி அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
குறிப்பாக 64.90% வருமானத்திற்கு அதிகமாக பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து சேர்த்துள்ளது நிரூபனம் ஆவதாகவும் எனவே லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனையை அறிவிப்பதற்காக 21 ஆம் தேதியான நாளை மறுதினம் காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.