சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிந்தர் காஷ்யப் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ராமதிலகம், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ராஜமாணிக்கம், பொங்கியப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உள்ள ராமதிலகம், திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர். கடலூர், காங்கயம், கோபி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு கீழ்நீதிமன்றங்களில் பணியாற்றியவர். நீதிபதி ஹேமலதா, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக உள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தாம்பரம் உள்ளிட்ட கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றியவர்.
தூத்துக்குடி மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியான கிருஷ்ணவள்ளி, திருநெல்வேலியைச் சேர்ந்தவர். திருச்சி, கடலூர், நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றியவர். திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியான பொங்கியப்பன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சி, நாமக்கல், திருப்பூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் பணியாற்றியவர்.