“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்

“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்
“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்
Published on

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும், இழுபறியான சூழலே நிலவுகிறது. இதில் பாஜக ஆட்சி செய்த மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாஜக பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த், பாஜக செல்வாக்கை இழந்ததையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார். தற்போது கமல்ஹாசன் கருத்திலும், சூசகமாக பாஜக இனி பலத்தை இழக்கும் என்பதைப் போல கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com