குழந்தைகள் தினத்தையொட்டி ஃபேஸ்புக்கில் விளையாட்டு ஒன்றும் பிரபலமாகியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக் வாசிகள் தங்களது குழந்தை பருவத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. குழந்தைகள் தினத்தை குழந்தைகள் மட்டுமில்லாமல் குழந்தை மனம் மாறாமல் உள்ள பெரியவர்களும் கொண்டாடித்தான் வருகின்றனர். அதுவும் சமூக வலைத்தளங்களில் அவர்களது விளையாட்டிற்கு பஞ்சமில்லை. பலரும் தங்களது குழந்தை பருவத்தில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டும், தனது குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் குழந்தைகள் தின விளையாட்டு ஒன்றும் ஃபேஸ்புக்கில் பிரபலமாகியுள்ளது. அது என்னவென்றால், குழந்தைகள் தின ஸ்பெஷலாக, பலரும் அவர்களின் குழந்தை பருவத்தை நினைவுகூர்ந்து ஒரு ஐந்தாறு கேள்விகளை அவர்களே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் அவர்களின் டைம்லைனில் பதிவிட்டுள்ளனர்.
அதே கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தங்களது நண்பர்களின் பெயரையும் டேக் செய்து, அவர்களின் குழந்தை பருவகாலத்தையும் நினைவுகூர்கின்றனர்.
இதனால் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தாலே, குழந்தை பருவ மகிழ்ச்சியில் பலரும் குதுகலிப்பது தெரியவந்துள்ளது. பெரியவர்களாக மாறிய பின்பும் குழந்தை மனம் மாறாமல் பலரும் இந்த விளையாட்டை தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் விளையாடி வருகின்றனர்.