போக்குவரத்து விதிகளை மீறக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை வசூலிப்பதற்கான நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகிறார்கள்.
மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு நடைமுறைப்படுத்திய புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறக்கூடிய வாகன ஓட்டிகளிடம் புதிய அபராதம் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19 ம் தேதி வெளியிட்டது. அதன்படி சென்னையில் இன்று முதல் புதிய அபராத தொகை வசூலிப்பதற்கான நடவடிக்கையை போக்குவரத்து காவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் 80 மையங்களில் அபராத தொகை வசூலிப்பதற்கான திட்டமிட்டு இருக்கும் நிலையில், இன்று காலையில் பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் புதிய அபராத தொகை தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நந்தனம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதன்படி
* புதிய அபராத தொகை வசூலிப்பதில் அவசர வாகனங்களாக இருக்கக்கூடிய தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால் 10,000 ரூபாய் அபராதம்,
* மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம்
* பைக் ரேஸில் ஈடுபட்டால் 5,000 ரூபாய் அபராதம்
* ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் 5,000 ரூபாய் அபராதம்
* கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம்
* வாகனத்தை பதிவு செய்யாமல் இயக்கினால் 2,500 ரூபாய் அபராதம்
என இந்த புதிய அபராத தொகைகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் கேட்டுக் கொண்டனர்.