நெல்லையில் திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் மணக்கோலத்தில் அரசுப்பள்ளிக்கு தம்பதியினர் நன்கொடை வழங்கிய நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கருவநல்லூரை சேர்ந்த வேல்குமார் மற்றும் உஷா. இவர்களுக்கு இன்று காலை தமிழ் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் கருவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரடியாக சென்றனர். அங்கு சென்று தங்கள் பங்களிப்பாக 5,100 ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
புதிய வாழ்க்கையை தொடங்கும் அவர்கள் மாணவ, மாணவிகள் வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவர்கள் அங்கு மணக்கோலத்தில் மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் திருமண வாழ்த்து கூறினர்.