தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. முதல் அலையின் போது ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 6,950 பேர் என்று இருந்த நிலையில் இரண்டாவது அலையின் ஒரு நாள் உச்சம் இரண்டு மடங்காகி இருக்கிறது. ஏற்கனவே இரவு நேர கட்டுப்பாடு , ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என கொரோனா பரவலை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து , வணிக வளாகங்கள், தியேட்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுவது உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.