பெண்ணின் இடுப்பு பகுதியில் இருந்த 4.5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த 55 வயது பெண்மணி தேவி. இவர் வயிறு வலி மற்றும் வயிறு வீக்கம் காரணமாக கடந்த மாதம் 28-ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், இடுப்பு பகுதியில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகப்பேறு மருத்துவத் துறையின் தலைமை மருத்துவர் அமுதா, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் அடங்கிய குழு செப்.9-ம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து இடுப்பு பகுதியில் இருந்த 4.5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர்.
சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறும் இது போன்ற சிகிச்சைகளை தற்போது புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில்: “அப்பெண்ணின் இடுப்புப் பகுதியில் இருந்த கட்டியானது, ‘ரெட்ரோ பெரிடோனியல் டியூமர்’ எனும் புற்றுநோய் கட்டியாகும். இது நரம்பில் இருந்துவந்த புற்றுநோய் கட்டி என்று திசுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகக்கூடிய இந்தச் சிகிச்சை இம்மருத்துவமனையின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. உயர்தர சிகிச்சைகளை செய்யக் கூடிய வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது” என்றும் அவர் கூறினார்.