(சாதனை படைத்த டாக்டர் பிரியா செல்வராஜ் குழந்தையுடன் இருக்கிறார். அருகில் டாக்டர் கமலா செல்வராஜ்)
கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நவீன மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆரம்ப நிலை கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க அப்பெண்ணின் கர்ப்பப்பையில் உள்ள இரு கருவகங்களில் ஒரு கருவகம் நீக்கப்பட்டது. மேலும் மற்றொரு கருவகமானது, அதன் இடத்திலிருந்து நீக்கப்பட்டு வயிற்று தோலின் கீழ் பகுதியில் இடம் மாற்று அறுவைசிகிச்சை மூலம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து குழந்தை பேறு வேண்டி அப்பெண் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்படி, இடமாற்றம் செய்யப்பட்ட கருவகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஊசி போட்டு அப்பெண்ணுக்கு கருமுட்டை வளரச் செய்யப்பட்டது. பின்னர் அப்பெண்ணின் கருமுட்டையை உறிஞ்சி எடுத்து கணவர் விந்தணுவுடன் இணைத்து, சோதனை குழாயில் கருத்தரிக்கப்பட்டது. பின்னர் அந்த கரு, வாடகைத் தாய் மூலம் வளர்க்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி பெண் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட கருவகத்தில் கருமுட்டையை வளரச் செய்து, அதனை உறிஞ்சி எடுத்து கருவாக்கியுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. கருவகம் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு குழந்தை பிரசவிக்க முடியும் என்பதை சென்னை ஜிஜி மருத்துவமனை மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இதனால் ஆரம்ப நிலை கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தை பேறு அடைய முடியும் என்பது மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.