தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தடை உத்தரவை அடுத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். இதுகுறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெட்டிசன்கள் பலர் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில், நியூட்ரினோ திட்டம் வெற்றியடையவில்லை. எங்களை போலவே ஆந்திரமக்களும் போராடினால் அவர்களுக்கும் வெற்றி கிட்டும் என பரப்பி வருகின்றனர். நியூட்ரினோ திட்ட அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்தும், மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடி செல்வில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பது தான் இத்திட்டம். இதையடுத்து, நியூட்ரினோ மையத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரியும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததது. இந்த நிலையில் மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூட்ரினோ திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.