கொரோனா கால மகத்துவர்: மகளின் திருமண சேமிப்பை கொண்டு சாலையோர மக்களின் பசியாற்றும் பெண்

கொரோனா கால மகத்துவர்: மகளின் திருமண சேமிப்பை கொண்டு சாலையோர மக்களின் பசியாற்றும் பெண்
கொரோனா கால மகத்துவர்: மகளின் திருமண சேமிப்பை கொண்டு சாலையோர மக்களின் பசியாற்றும் பெண்
Published on

பெருந்தொற்று காலத்தில் சாலையோர ஆதரவற்ற மக்களின் பசியாற்ற மகளின் திருமண சேமிப்பை செலவழித்து வரும் நெல்லையை சேர்ந்த ஊர்க்காவல் படை பெண் காவலர், நல் முயற்சியொன்றை முன்னெடுக்கிறார். அவரை பற்றிய சிறு பதிவை இங்கு பார்க்கலாம்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், பரபரப்பாக இயங்கும் மாநகர சாலைகளை மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாலைவனமாக மாற்றியிருக்கிறது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் சாலையில் ஆதரவற்று கிடக்கும் மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஆங்காங்கே சில நல்ல தன்னார்வ அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் மாதம் ரூபாய் 2500 வருமானத்துடன் பணியாற்றி வரும் நெல்லை மாநகர ஊர்க்காவல் படை பெண் காவலர் சியாமளாதேவி நாள்தோறும் தன்னால் இயன்ற அளவு 50 பேர்களுக்கு வீட்டிலேயே உணவு சமைத்து அதனைப் பார்சலாக செய்து சாலைகளில் பசியோடு இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறார். ஊரடங்கு தொடங்கிய நாளில் பசியில் சுருண்டு சாலையில் விழுந்த  முதியவரின் பரிதாப நிலையை கண்டதும், மனம் கனத்து இந்த  உணவு சேவையை உடனே தொடங்கி இருக்கிறார். ஆனால் இதற்காக இவர் எடுத்த ரிஸ்க் கொஞ்சம் அதிகம்.

நெல்லை மாநகர காவல் துறையின் கீழ் இயங்கும் ஊர்க்காவல் படையில் கடந்த 12 வருடங்களாக காவலராக பணியாற்றி வருகிறார் சியாமளா தேவி.  இவர் நெல்லை சந்திப்பில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தன் கணவர், ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் சாலையில் உணவின்றி மயங்கிய முதியவரின் நிலைகண்டு வருந்தி, அது நாள் முதல் தினந்தோறும் தனது வீட்டில் தன் மகள்களின் துணைகொண்டு வெண்பொங்கல், கூட்டாஞ்சோறு தக்காளி சாதம் என நாள்தோறும் வெவ்வேறு வகைகளில் மதிய உணவு சமைத்து, பார்சல் செய்து பசியில்  இருக்கும் முதியவர்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.  இதற்காக நாள்தோறும் தனது ஊர்க்காவல் படை பணி முடிந்து மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வரும் சியாமளாதேவி உணவுப் பார்சல்களை எடுத்துக்கொண்டு துணைக்கு தன் மகளையும் அழைத்துக்கொண்டு மக்களுக்கு நேரில் வழங்கி வருகிறார்.

தன்னுடைய இந்த உணவு சேவைக்காக, திருமண வயதை நெருங்கி வரும் தன்னுடைய மூத்த மகளின் கல்யாணத்துக்காக சேமித்த பணத்தை, குடும்பத்தினர் ஒப்புதலுடன் செலவழித்து வருகிறார் இவர். அந்தவகையில், மகளின் திருமணத்திற்காக மெல்லமெல்ல சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை உடைத்து உணவு தயாரித்து வருகிறார்.  நாள்தோறும் 50 பேர் வரை இவரால் பசியாறுகின்றனர். ஒட்டுமொத்த குடும்பத்தின் முயற்சி நாள்தோறும் 50 பேரின் பசியை போக்க உணவாகி வருவது பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை தரும் முயற்சி.

நெல்லை நாகராஜன் | படங்கள்: நாராயணமூர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com