நெகிழி பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கி வந்த பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மஞ்சள் பைகளை வழங்கினர்.
நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் பொதுமக்களை மஞ்சள் பைகளை பயன்படுத்த வைக்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு கடந்த 2021 டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மீண்டும் மஞ்சள் பை என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதியின் மாவட்ட உள்ளூர் திட்டம் மூலம் வாரம் தோறும் பொதுமக்களுக்கு பயனுள்ள செயல்பாடுகளை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் முதியோர் காப்பகங்களில் இருக்கும் பெரியோர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நெகிழி இல்லா தமிழகத்தை உருவாகும் அரசின் முயற்சிக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி பொறுப்பாளர் ராஜகோபால் தலைமையில் விஜய் மக்கள் மன்றத்தினர் நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களிடம் இருந்த நெகிழிப் பைகளை பெற்றுக்கொண்டு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.