நெல்லையில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 67 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்படி இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மிகவும் கவனிக்கப்பட்ட இந்த வழக்கில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட வசந்த் மற்றும் ராஜேஷ்க்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். கைதாகி இருந்த மேலும் நால்வர் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.