செல்லப் பிராணிகள் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிப் போகும் உயிரினங்கள் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல் கிளி உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் அப்படி வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மனித உயிர்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாகி விடுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்..
இதில் குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பலரும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். சில நேரங்களில் நாய்களுக்கு வெறிபிடித்து மனிதர்களைக் கடிப்பதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நாய்களைப் பிடித்துச் செல்வதற்காகப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அந்தந்த மாவட்ட நகராட்சிகளுக்கு நாய்களைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், "வெறிநாய்கள் சுற்றித் திரிந்தால் அந்தந்த நகராட்சிக்குத் தகவல் கொடுத்தால் உடனடியாக நாய்களைப் பிடித்துச் செல்வார்கள் இனி பயம் வேண்டாம்" எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையில் திருநெல்வேலி 36வது வார்டில் நாய்கள் தொல்லையை மாநகராட்சி நிர்வாகம் க் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் நகைச்சுவையாகச் சுவரொட்டி ஒன்றை அப்பகுதியில் ஒட்டியுள்ளார். அதில் 36 வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு குழுவின் உறுப்பினர்கள் என்ற தலைப்பு ஒன்று வைத்து அதன் கீழ் வரிசையாக நாய்களின் புகைப்படங்களோடு அவற்றின் பெயர், வயது குணம் மற்றும் அந்த நாய்களால் கடிபட்டவர்களின் எண்ணிக்கையைக் கற்பனையோடு பதிவிட்டுள்ளார்.
குறிப்பாகப் புண்ணியமூர்த்தி, களத்தூர் தட்சிணாமூர்த்தி, வழுவக்குடி சுந்தரமூர்த்தி, மேலக்குடி ராமமூர்த்தி என்று நாய்களுக்குக் கலக்கலான பெயர்களைச் சூட்டியுள்ளார்
மேலும் அதன் குணங்களாக சண்டையை இழுத்தல் கடித்து வைத்தல் ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுதல் சங்கத் தலைவனாகப் பாவித்தல், பதுங்கி இருந்து விரட்டுதல், எனக் குறிப்பிட்டுக் கடிபட்டவர்கள் எண்ணிக்கையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
இந்த போஸ்டர் பார்த்துச் சென்ற பலருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், நாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பாடம் புகட்டும் ஒருவித நூதன போராட்டமாகவே இச்சம்பவம் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.