நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கோடை காலத்தில் குழந்தைகளை மகிழ்விப்பது மட்டுமின்றி மன ரீதியாகவும் பலப்படுத்தும் விளையாட்டு போட்டிகளை மைய நூலகம் நடத்தி வருகிறது.
ஆண்டு முழுவதும் புத்தகப்பையை சுமக்கும் குழந்தைகள், கோடை விடுமுறை விட்டதும் அதனை கொண்டாட துவங்கி விடுவார்கள், வெயில் காலம் என்றாலும் அதனை பொருட்படுத்தாத இந்தக் காலங்களை குழந்தைகளின் கொண்டாட்டக் காலமாகவே கருதலாம். அந்த அளவிற்கு அவர்களிடம் உற்சாகத்தை காணலாம்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய கோடைக்கால இலவச பயிற்சி முகாமானது 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குறிப்பாக இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 150 க்கும் அதிகமான குழந்தைகள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர்.
இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்கும் குழந்தைகள் டிவி, வீடியோ கேம் என தங்களது பொழுது போக்கை கழித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மனதுக்கும், உடலுக்கும், அறிவிற்கும் புத்துணர்வூட்டும் பாரம்பரிய விளையாட்டான தட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பல்லாங்குழி, கோலி, பாண்டி, போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது என்பது மிகக்குறைவு, பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கு வலுவூட்டுவதுடன், சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு, தைரியம் போன்ற பல்வேறு நற்பண்புகளை கற்று கொடுக்கிறது.
இதனை மீண்டும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் இந்தப் பயிற்சிகளானது நடைபெறுகிறது.. இது குழந்தைகளுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக தெரிவிக்கின்றனர், சிறுவர், சிறுமியர் இதன் மூலம் தெரியாத பலரின் நட்புக்கள் கிடைத்துள்ளதாவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் இந்த விளையாட்டுகளில் சிறுவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு அதனை விளையாடி மகிழ்ந்தனர்.
நம் முன்னோர்கள் விளையாடிய இந்தப் பாரம்பாரிய விளையாட்டுகளில் வாழ்க்கைக்கான பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர், மேலும் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்றில்லாமல் இது போன்ற விளையாட்டுகளினால் மன அழுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் விடுபட வாய்ப்பாக அமையும் என்கின்றனர் எழுத்தாளர்கள்.