நெல்லையில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், பெண் ஊழியர்களின் பாதங்கள் புண்பட்டன.
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு ஏற்படும் மன அழுத்ததை போக்கும் வகையில் இந்தப் போட்டிகளானது நடத்தப்பட்டது. குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி போன்ற பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.
அப்போது 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர் பெண்கள் கடும் வெயிலில் செருப்பின்றி வெறும் காலில் ஒடியதால், அனைவரது காலும் வெந்து காயம் ஏற்பட்டது. இதனால் பலர் நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு ஐஸ் கட்டிகள் வாங்கி கொடுத்து, காலில் வைக்கப்பட்டது.
இது குறித்து பாதம் புண்பட்ட பெண் ஊழியர்கள் கூறும் போது, “காலை 9 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி 11.30க்கு மேல் வெயிலில் துவங்கியது. மேலும் முதலில் ஓடியவர்களை செருப்பின்றி ஒடச் சொன்னார்கள். கோடைக் காலம் என்பதால் அதிகாலையிலேயே போட்டிகள் நடைபெற்றால், இது போன்று காயங்கள் ஏற்படாமல் இருந்திருக்கும்” என்று வருத்தத்துடன் கூறினர்.