கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து மருத்துவமனையில் உயிரிழந்த இசக்கிமுத்து முன்னதாக அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடையநல்லூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, மகன், மகள் ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். முன்னதாக அவர்கள் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த இசக்கிமுத்து கடந்த மாதம் 4, 18, 25 ஆகிய தேதிகளிலும், நடப்பு மாதம் 9 ஆம் தேதியும் புகார் மனு அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் உடனடியாக காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு சென்று அதன்பேரில் ஆய்குடி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். அந்த விசாரணையில் கடந்த ஜுலை முதல் அக்டோபர் வரை இசக்கிமுத்து குடும்பத்தினர் காசிதர்மம் கிராமத்தில் இல்லை, திருப்பூரில் வசித்து வந்ததாகவும் கிராம நிர்வாக அலுவலர் சான்று அளித்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இசக்கிமுத்து அளித்த மனு மீது உடனே நடவடிக்கை எடுக்காமல் இல்லை எனவும் பத்திரிகைகளிலும், ஊடங்களிலும் தெரிவிக்கப்படுவது போன்று இசக்கிமுத்து குடும்பத்தினர் 6 மனுக்கள் அளிக்கவில்லை எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், சுப்புலட்சுமி என்பவர் அளித்த 4 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தவறான செய்தி எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனினும், இசக்கிமுத்து, அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தீக்குளித்து மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், உண்மையான காரணங்களை கண்டறியவும் அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இனி வரும் காலங்களில் கந்துவட்டி புகார் தொடர்பாக 962 9711 194 என்ற பிரத்யேக எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், அவை மீது ஒருவார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.