முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் தாமிரபரணி வெள்ளத்தின் நடுவே சிக்கிய ஒரு குடும்பத்தை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க பாராட்டினர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் பொட்டல் காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (27) இவருடைய மனைவி முத்துமாரி (25) மகன் சுரேஷ் (7), மகள் பேபி (5), மற்றும் முத்துமாரியின் தாய் ராமு (வயது 50) ஆகியோர் ஊரின் அருகே உள்ள வாய்க்கால் பகுதிக்கும் தாமிரபரணி ஆற்று பகுதிக்கும் இடையே இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வழிபடுவதற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஐந்து நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெள்ளமென வந்து கொண்டிருந்தது. இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வருவதற்கு முன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இதனால் பாதுகாப்பு கருதி தன் குழந்தைகளுடன் கோவிலின் மேல் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார். மேலும் தான் கொண்டுவந்த செல் மூலமாக தன் ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியாத காரணத்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணி தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சுமார் 12 பேர் அங்கே வருகை தந்து அவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு அந்த ஐந்து நபர்களையும் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் அறிவுறுத்தலின் பேரில் சுப்பிரமணியன் (நிலைய அலுவலர், போக்குவரத்து) ஆல்பர்ட், ராஜா, திருமலைக்குமார், ரமேஷ், எஸ்.எஸ்.முருகன், கொம்பையா, தனசிங் ஆகியோர் தங்கள் உயிரை துச்சமென மதித்து அந்த ஐந்து பேரையும் காப்பாற்ற பைபர் படகு மூலமாக கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று அந்த ஐவரையும் பத்திரமாக மீட்டனர்.
நள்ளிரவு என்றும் பாராமல் நீரின் வேகத்தையும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 5 பேரையும் மீட்ட மீட்புக் குழுவினர்களை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.