நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர், ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். சிலமாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டிய சிவன்ராஜ், தந்தையிடம் பணம் கேட்டு வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். மேலும் கடன்வாங்கியும் ரம்மி விளையாடிய சிவன்ராஜ், இதுவரை ஆறு லட்சம் ரூபாய் வரை இழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் திங்களன்று தந்தையிடம் ஒருலட்ச ரூபாய் வாங்கிச்சென்ற சிவன்ராஜ், அதனையும் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் விஷமருந்தி உயிரிழந்த நிலையில், தோட்டத்தில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை கூராய்வுக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வு செய்துவருகிறார்கள்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.