பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இன்று நடைபெற்றது. பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழக மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வை எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவும் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மதுரை மாவட்டம் பசுமலையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவை அவரது தந்தை கண்ணன் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றார். தேர்வு முடித்துவிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டிற்கு ஐஸ்வர்யாவுடன் கண்ணன் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணசாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.