நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை பாலரெங்காபுரம் தனியார் பள்ளியில் மதுரை மாநகராட்சி சார்பில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில் 'உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் அரசியல் சாசனத்தை ஒங்கி முழங்கி இருக்கிறது, இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை உள்ளடக்கியது என்பதை தீர்ப்புகள் சூட்டிக் காட்டுகிறது, மாநில உரிமைகள் மீது ஒன்றிய அரசு மிக கொடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது, மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்பாக உள்ளது,
ஆளுநர் அமைச்சரவை முடிவு, சட்டமன்ற முடிவுக்கு கட்டுப்பட்டவர், சட்டமன்ற முடிவை பரிசீலனை செய்வது, காலம் தாழ்த்துவது போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், பிரதமரின் ஜப்பான் பயணத்தால் மதுரை எய்ம்ஸ் பணிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்,
ஒன்றிய அரசின் ஆட்சி மன்றக் குழு மதுரைக்கு ஆய்வுக்கு வந்துள்ளது, ஒன்றிய அரசின் ஆட்சி மன்றக் குழு தமிழகத்திற்கு ஆய்வு வர உரிமையில்லை, 1976 ஆம் ஆண்டு சட்டத்தின் படி தமிழகத்திற்கு இந்தி ஆட்சி மொழி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆட்சி மொழி அமலாக்கத்திற்கு ஆட்சி மன்றக் குழு ஆய்வுக்கு வர தேவையில்லை, தமிழகத்தில் இக்குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை' என கூறினார்