நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனம், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனை அடுத்து நாமக்கல், சேலம், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது தவிர கணக்கில் வராத 150 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி தாளாளர், இயக்குநர்கள் மற்றும் அவரது உறவினர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.