தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் நேரில் வலியுறுத்தியதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கடும் அமளி ஏற்பட்டது. மேலும், தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஜனநாயக விரோத நடவடிக்கை நடைபெற்றதாக கூறி குடியரசுத் தலைவரிடம் முறையிட மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பிற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக சபாநாயகர் செயல்பட்டதாக கூறினார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாக கூறிய அவர், தங்கள் முறையீட்டை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது என கூறிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றும் குறிப்பிட்டார்.