காவல்துறை நடவடிக்கையால் பாஜகவில் இணைகிறீர்களா..? - நெடுங்குன்றம் சூர்யா சொன்ன பதில்!
அதமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இணைந்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இதில் ரவுடி மயிலாடுதுறை அகோரம், மறைந்த ஶ்ரீபெரும்புதூர் பிபிஜிடி சங்கர், புளியந்தோப்பு அஞ்சலை, கல்வெட்டு ரவி ஆகியோர் வரிசையில் சென்னை வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சூர்யாவும் பாஜகவில் இணைந்து உள்ளார்.
சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் அவரின் மனைவிக்கு பாஜகவில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவராக பதவி வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி நேற்று நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பட்டியல் அணி மாநில செயலாளர் பதவிக்கான அறிவிப்பை நேரில் அழைத்து வழங்கி உள்ளார்.
பாஜகவில் தொடர்ச்சியாக குற்றப்பின்னணி உடையவர்கள் இணைகிறார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த இணைப்பு உள்ளது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நெடுங்குன்றம் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் காவல்துறை நடவடிக்கையால் பாஜகவில் இணைகிறீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “என் மேல் வழக்குகள் இருக்கின்றன. வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கிறது. வாரண்ட்டில் ஏதும் இல்லை. புதிதாகவும் ஏதும் பதிவாகவில்லை. மீதமுள்ள வழக்குகளிலும் போராடி விடுதலை அடைவேன்” என்றார்.