டெல்லியில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். அவருடைய நெருங்கிய கூட்டாளியான சதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நண்பர்கள் அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்துள்ளனர். வருகின்ற 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள இயக்குநர் அமீர், விசாராணையை எதிர்கொள்ள எப்போதுமே தயாராக உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். ’கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் எனது தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையையும் எடுத்துக் கூறுவேன்’ என அமீர் குறிப்பிட்டுள்ளார்.