எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அதனை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்பதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில்தான் எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பான விவகாரம் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக எண்ணூரில் நேற்று நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்து கடலுக்குள் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயுக் கசிந்தது. இது அப்பகுதி மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இரவு எண்ணூரில் இயங்கிவரும் கோரமண்டல இண்டர்நேசனல் லிமிடெட் எனும் நிறுவனத்தின் சார்பாக கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அமோனியா வாயுவை கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதில் அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சித்திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் இவ்வழக்கானது ஜனவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றுகூறி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், அமோனியா கசிவிற்கு காரணமான தொழிற்சாலை போன்றவர்கள் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைப்பர்.