நாட்டில் பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது குழந்தை விழுந்தது மிகவும் வருந்தத்தக்கது எனவும், பல நேரத்திற்கும் மேலாக போராடி வரும் மீட்புப்படையினர் குழந்தையை பத்திரமாக மீட்பார்கள் என நம்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பினரும் அதிக முக்கியத்துவம் அளித்து, பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.