மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டார் என்று கூற எம்.நடராஜனுக்கு எந்த அருகதையும் இல்லை என திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, ஆளுனரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பும் கொடுக்க வேண்டியது ஒரு எதிர்கட்சி தலைவரின் பொறுப்பு. 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுகவின் பொறுப்பு. ஒரு முதலமைச்சர் என்று கூடப் பாராமல் அவரை அவமானப்படுத்தும் நடராஜனுக்கும், முதலமைச்சராக நினைத்து ஏமாந்து தவிப்பவருக்கும் ஸ்டாலினின் அரசியல் நாகரீகம் தர்மசங்கடத்தை உருவாக்குகிறது.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமரை ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக சந்திக்க சென்ற போது ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என்று வாழ்த்தியது, அவருடன் குடியரசு தினவிழாவில் பங்கேற்றது, முதலமைச்சரின் காருக்கு வழி விட்டு காத்திருந்தது போன்றவை எல்லாம் நடராஜனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று அவ்விளையாட்டு தடை செய்யப்பட்டதிலிருந்து திமுக போராடியது. திமுக ஆட்சியின் போது தங்கு தடையின்றி ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டிது. அலங்காநல்லூரிலும், சென்னையிலும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். தமிழுணர்வுடன் மெரினாவில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அங்கு சென்று முதல் நாளே அவர் மாணவர்களை வாழ்த்தி விட்டு திரும்பினார். ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை ‘தேச விரோதிகள்’ என்று கூறி பாஜகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு துணை போன அதிமுக ஆட்சிக்கு உரிமை கொண்டாடும் நடராஜன், மாணவர்கள் போராட்டத்தில் ஸ்டாலின் வன்முறையை தூண்டி விட்டார் என்று கூறுவது வெட்க கேடான வெற்றுக் குற்றச்சாட்டு.