சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு.. நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் விற்க தற்காலிக தடை

நாமக்கல் தனியார் உணவக்கத்தில் சாப்பிட்டவர்களில் 43 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல் உணவகம், இறந்த சிறுமி
நாமக்கல் உணவகம், இறந்த சிறுமிபுதிய தலைமுறை
Published on

நாமக்கல் அசைவ உணவகம்

நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார்(25) என்பவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, பரமத்திசாலையில் ஐ வின்ஸ் என்ற உணவகத்தை ஒரு வருடத்திற்கு முன்பு துவக்கி நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி மதியம், மாலை, இரவு உணவுகளை சாப்பிட்ட பலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த சுஜாதா(38) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது சகோதரன் சினோஜ்(36), மகள் கலையரசி(14), மகன் பூபதி(12)ஆகிய மூவரையும் இரவு உணவு வாங்கிவர அனுப்பி உள்ளார்.

உடல்நலம் விசாரித்த ஆட்சியர்
உடல்நலம் விசாரித்த ஆட்சியர்புதிய தலைமுறை

சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி

இவர்கள் ஐ வின்ஸ் உணவகத்தில் ரொட்டி, சவர்மா, சிக்கன் ரைஸ், கிரில் சிக்கன் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கி வந்து, அவர்களது வீட்டில் உறவினர் கவிதா(56) ஆகியோருடன் சாப்பிட்டுள்ளனர். இதில் 5 பேருக்கும் நேற்று மாலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை கலையரசி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து நாமக்கல் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவ மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு

இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 6 மாணவிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதே உணவகத்தில் சாப்பிட்டு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நேற்று மதியம் முதல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் டாக்டர் உமா, நேற்று அந்த தனியார் உணவகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமைக்க வைக்கப்பட்டிருந்த இறைச்சி, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அவை தரமற்ற வகையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அதனை அப்புறப்படுத்தி உணவகத்திற்குச் சீல் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து உணவுகளை அப்புறப்படுத்தி உணவகத்திற்குச் சீல் வைத்தனர்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியர்
ஆய்வில் மாவட்ட ஆட்சியர்புதிய தலைமுறை

சிறுமியின் தாயார் புகார்!

இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாயார் சுஜாதா அளித்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் உணவக உரிமையாளர் நவீன்குமார்(25), ஒடிசாவைச் சேர்ந்த சமையலர் சஞ்சய் மககுத(27), தபாஸ்குமார்(30) ஆகிய 3 பேர் மீது ஐபிசி 273, 328, 304(II) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதே உணவகத்தில் சாப்பிட்ட பலருக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நாமக்கல் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை

சம்பவம் தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் டாக்டர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சீல் வைக்கப்பட்ட உணவகம்
சீல் வைக்கப்பட்ட உணவகம்புதிய தலைமுறை

அப்போது பேசிய ஆட்சியர் உமா, ’நாமக்கல் தனியார் உணவகத்தில் சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி உயிரிழந்த நிலையில், 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 43 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும். உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்

மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண், ’நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் தரமான உணவுப் பொருட்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com