மாநகராட்சியாக தரம் உயரத்தப்படும் நாமக்கல் நகராட்சி!

நகராட்சியாக இருக்கும் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.. நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்வதில் உள்ள சாதக - பாதகங்கள் மற்றும் மக்களின் எண்ண ஓட்டங்களைப் பார்க்கலாம்...
நாமக்கல் மாநகராட்சி
நாமக்கல் மாநகராட்சிமுகநூல்
Published on

செய்தியாளர்: துரைசாமி

நகராட்சியாக இருக்கும் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.. நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்வதில் உள்ள சாதக - பாதகங்கள் மற்றும் மக்களின் எண்ண ஓட்டங்களைப் பார்க்கலாம்..

நாமக்கல் என்றாலே, விஸ்வரூப வடிவில், கைகூப்பி வணங்கியபடி, காட்சி தரும் ஆஞ்சநேயர் தான் நினைவுக்கு வருவார்.நாமக்கல்லில் இருந்து தான், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் முட்டைகள் சப்ளை ஆகின்றன.பேரூராட்சியாக இருந்த நாமக்கல், 1988 ல் நகராட்சியாக தரம் உயர்ந்தது.

2010 ல், நல்லிபாளையம், கொசவம்பட்டி உள்பட 9 ஊராட்சிகளை இணைத்து, சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது நாமக்கல். இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக, நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, கடந்த மார்ச் மாதம் ஆணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

கீழ்வேட்டாம்பாடி, ரெட்டிபட்டி, வள்ளிபுரம், பாப்பிநாயக்கன்பாடி, வசந்தபுரம் உள்பட 12 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க, அரசுக்கு முன்மொழிவும் அனுப்பப்பட்டது. இதன்படி, ”புதிதாக அமையும் நாமக்கல் மாநகராட்சியின் பரப்பு, 145.31 சதுர கிலோ மீட்டர்.மக்கள் தொகை 3 லட்சம்.நகராட்சியின் ஆண்டு வருவாய் 45 கோடி ரூபாயாக உள்ள நிலையில், மாநகராட்சி வருவாய் 47 கோடி ரூபாயைத் தாண்டும். மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகள், அரசின் விதிமுறைப்படி எளிதாக நடைமுறைப் படுத்தப்படும், அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படும், அரசின் மானியம் உயரும். “என கருதப்படுகிறது.

நாமக்கல் மாநகராட்சி
“இந்தியன் படம் எடுக்கும் போது இதையெல்லாம் நான் நினைக்கல” - சேனாதிபதி வயது குறித்து இயக்குநர் ஷங்கர்!

ஆனால், ஏற்கனவே நகராட்சியுடன் இணைந்த பகுதிகளில்கூட இதுவரை முழுமையாக பாதாள சாக்கடை, சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆனால், ஊராட்சி வரிகள் நகராட்சி வரிகளாக உயர்ந்தன. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்வதால், அனைத்து வரிகளும், இன்னும் உயரும் என்று அங்கு வசிப்போர் அஞ்சுகின்றனர்.

மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 12 ஊராட்சிகளில் மக்களிடம் கருத்து கேட்காமல், ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 12 ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என அச்சம் எழுந்துள்ளது. ஊராட்சிகளின் பிரதிநிதிகளை எளிதில் சந்திக்கும் நிலை, மாநகராட்சியான பிறகு இருக்காது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

நாமக்கல் மாநகராட்சி
கோவை: பூனைகளுக்காகவே வாழ்க்கை அர்ப்பணிப்பு; திருமணத்தை கூட உதறித் தள்ளிய பெண்... யார் இவர்?

ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் அரசிடமிருந்து நேரடியாக நிதி பெற்று அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்று நாமக்கல்லைச் சேர்ந்த, மற்றொரு தரப்பு மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் வரிகள் உயர்த்தப்படும் என்பது தவறான கருத்து என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, அத்துடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் மக்களிடம் நேரடியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதே நாமக்கல் மக்களின் எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com