நாமக்கல் சிறுமி மீது கொலை முயற்சி
நாமக்கல் சிறுமி மீது கொலை முயற்சிபுதிய தலைமுறை

நாமக்கல் | சிறுமியை கொல்ல முயன்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது தாய் கைது!

திருச்செங்கோடு சிறுமியை கொலை செய்யும் நோக்கில் கழுத்தில் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது தாயார் கைது... சிறுமி சேலம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உயர் சிகிச்சையில் உள்ளார்.
Published on

செய்தியாளர் : மனோஜ்கண்ணா

திருச்செங்கோட்டை அடுத்த சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி உட்பட மொத்த மூன்று பேரை கத்தியால் குத்திய எம்.சி.ஏ பட்டதாரி செந்தில்குமார் மற்றும் அவரது தாயார் சம்பூர்ணம் ஆகியோர் மீது BNS 49, 238, 109 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சுரேஷ்பாபு இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சக்திநாயக்கன்பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித்தெருவை சேர்ந்தவர் சண்முகம்- சம்பூர்ணம் தம்பதி. இவர்களின் மூத்த மகன் செந்தில்குமார். MCA படித்து விட்டு பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை இன்று கத்தியால் வெட்டியுள்ளார். இதைப் பார்த்த செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்கமுயன்றபோது அவர்களையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் பெண் குழந்தை தஷ்மிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை

ஊரக போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி,

‘செந்தில்குமார் கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டில் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதுதொடர்பான மருத்துவச் சீட்டுகள், அவர் பயன்படுத்தி வந்த மருந்துகள் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர், சிகிச்சைக்கு பின் ஓரளவு தேறி வந்திருக்கிறார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில், மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல், வீட்டின் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இவருக்கு அதிகப்படியான சத்தம் கேட்கும்போது மனநிலை பாதிக்கப்படுவதாக ஒரு தகவல் உள்ளது. இந்த நிலையில் செந்தில்குமார் வீட்டில் இன்று குழந்தைகள் சிலர் விளையாடியுள்ளனர். அதன்படி

  • செந்தில்குமாரின் தம்பி மகன் மற்றும் மகள்,

  • இக்குழந்தைகளின் இன்னொரு உறவினர்,

  • கத்தியில் வெட்டியதால் பாதிக்கப்பட்ட தஷ்மிதா (பக்கத்து வீட்டுக் குழந்தை)

உட்பட மொத்தம் ஐந்து பேர் செந்தில்குமார் இருக்கும் இடமருகே அமர்ந்து டேப் ஒன்றில் கேம் விளையாடி வந்துள்ளனர். விளையாட்டு மும்முரத்தில் சத்தம் போட்டு விளையாடியுள்ளனர். அப்போது கையில் ஒரு கத்தியுடன் வேகமாக வந்த செந்தில்குமார் சோபாவில் அமர்ந்திருந்த தஷ்மிதாவை கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை

இதனைக் கண்டு மற்ற குழந்தைகள் அலறி ஓடி வெளியில் இருந்தவர்களை கூப்பிட்டுள்ளனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த தங்கராஜ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை தடுக்க முயற்சிக்கவே அவர்களையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், செந்தில்குமாரை பிடித்து ஊரக போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் செந்தில்குமாரை தங்கள் பொறுப்பில் வைத்து விசாரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கத்தியில் வெட்டியதில் பாதிக்கப்பட்ட தஷ்மிதாவின் தந்தை பிரபு மற்றும் உறவினர்கள் ஊர்காரர்கள் என சுமார் 150 பேர் நேற்று குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, திடீர் சாலை மறியலில் இன்று காலை ஈடுபட்டனர். அப்போது அந்த தந்தை, “எனது பெண்ணிடம் செந்தில்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்ககூடும். அதனை என்னிடம் குழந்தை தெரிவித்துவிடும் என்ற அச்சத்தில், கத்தியால் வெட்டியுள்ளார்” எனக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதன்பேரில் தாய் மற்றும் மகன் என இருவர் மீதும் கொலை முயற்சி, குற்றத்தை மறைப்பது மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக, BNS 49, 238, 109 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை

இதில் இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் காவல்துறையினர். அங்கே நீதிபதி சுரேஷ் பாபு இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில்குமார், சம்பூரணம் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com