இன்று பெரும்பாலான விவசாயிகள் ஒற்றை பயிர் முறை விவசாயத்தை பின்பற்றுவதை பரவலாக காண முடியும் நிலையில் கலப்பு பயிர் முறையை பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பல வகையிலும் லாபகரமானதாக இருப்பதாக நாமக்கல் விவசாயி பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மஞ்சள், வெங்காயம், பப்பாளி, துலுக்க சாமந்தி என பூ, காய், பழம், என பல்வேறு ரகங்களை கலந்து நடவு செய்யும் போது ஒவ்வொரு ரகத்திற்கும் சந்தை, வாடிக்கையாளர், விலை என பல அம்சங்கள் மாறுபடுகிறது. இதனால் ஒரு பயிர் கைவிட்டாலும், மற்றொன்றின் மூலம் நிறைவான வருவாய் ஈட்டுகிறார் பெரியசாமி.
“2015 டிசம்பரில், ஈஷா விவசாய இயக்கம் சார்பில் சுபாஷ் பலேகர் அவர்களின் 9 நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட பின் ரசாயன விவசாயத்திலிருந்து முழுமையாக வெளியேறினேன். கலப்பு பயிர் விவசாயம் செய்கிற போது ஒரு பயிர் ஏமாற்றினாலும் மற்றொரு பயிரில் நல்ல மகசூல் எடுக்க முடிகிறது.
நல்ல விலைக்கு விற்கவும் முடிகிறது. கலப்பு பயிர் முறையில் பயிரிட்டு அதை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லும் போது ஒரு நாளில் ரூ.1000 – 1500 வரையிலும், வருடத்திற்கு செலவுகள் போக தோராயமாக 5 லட்சம் வரையிலும் வருவாய் ஈட்ட முடியும்” என்றார் நாமக்கல் விவசாயி பெரியசாமி.