கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அப்பணத்தைக் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுவரை 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சிபிசிஐடி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால்கனகராஜ் உடன் ஆஜரானார். இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இது மட்டுமல்லாது நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அவரது மகன் பாலாஜியும் ஆஜரானார். அவர்கள் அளிக்கும் பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் பிடிப்பட்ட நான்கு கோடி ரூபாய்க்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.