வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை நடைபெறும் குருத்தோலை ஞாயிறையெட்டி சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும், பழையமாதா ஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையிலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கடலில் நீராடியும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.