நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கடற்பகுதியில் மிதந்து வந்த நெட்டி வேலைபாட்டுடன் புத்தமதத் துறவி சிலை உள்ள மியான்மர் நாட்டைச் சேர்ந்ததாக கருதப்படும் தெப்பம் ஒன்று இன்று கரை ஒதுங்கியது கரையிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய தெப்பத்தை கிராம மக்கள், படகில் கட்டி கரைக்கு இழுந்து வந்தனர்.
மியான்மர் நாட்டை சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த தெப்பம் பத்து அடி உயரமும், ஆறு அடி நீளமும் ஆறு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அதில் கூம்பு வடிவ கோபுரமும் இரு புறமும் டிராகன் உருவ பொம்மையும் நெட்டியால் செய்யப்பட்டுள்ளது. தெப்பத்தில் புத்த மத துறவி சிலை ஒன்றும், பாத்திரங்கள், காலணி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, விசிறி. கரண்டி, ஆறு சிறிய பீங்கான் தட்டுகள், கைப்பிடியுடன் கூடிய கண்ணடி கப், போன்ற பொருட்கள் அதில் இருந்தன.
இந்த தெப்பம் கடலில் மிதந்து செல்லக்கூடிய வகையில் 9 வெள்ளை நிற போயாக் கட்டைகளை அடியில் வைத்து முங்கில், போன்ற மரத்தால் இந்த தெப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் வசதி உள்ள பணக்காரர்கள் தங்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டாால், அவருடைய அஸ்தியை தெப்பம் தயார் செய்து, அதில் அவர்கள் விரும்பிய பொருட்களுடன் கடலில் அனுப்பும் வழக்கம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மியான்மர் நாட்டில் இறந்தவர்கள் நினைவாக கடலில் விடப்பட்ட இந்த தெப்பம் கடலில் தற்போது வீசிவரும் பலத்தக் காற்றில் வெள்ளப்பள்ளம் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது.
அலங்கார வேலைப்பாடுடன் காணப்படும் தெப்பத்தை வெள்ளப்பள்ளம் வானவன்ம காதேவி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.