நாகை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, சதுர அடிக்கு 6 ரூபாய் மட்டுமே வழங்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக நாகை மாவட்டத்தில் 55கிமீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் இதற்காக கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. காவிரி டெல்டாவில் நன்கு விளையக்கூடிய இந்த நிலங்களின் சந்தை மதிப்பு சதுர அடி 200ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அரசின் வழிகாட்டும் மதிப்பு 50ரூபாயாக உள்ளது.
ஆனால் 4வழிச்சாலைக்கு கையகப்படுத்தும் இந்த நிலத்திற்கு சதுர அடிக்கு 6ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புகொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிமாட்டுவிலை ரூ.6 விலை நிர்ணயம் செய்துள்ள மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்காதவாறு மாற்றுபாதை ஏற்படுத்த கோரியும், சதுரஅடிக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்