செய்தியாளர்: C.பக்கரிதாஸ்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 30 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளி உரிமையாளரும் நிர்வாகியுமான ரெகுபதி கடந்த மே 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ரெகுபதி பணியிலிருந்தபோது அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த மற்றோரு ஆசிரியர் கோதண்டபாணி, தற்போது (2 ஆண்டுகளுக்கு முன் வேறுபள்ளிக்கு பணிக்கு சென்றிருந்தார்) மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்ந்திருக்கிறார்.
கோதண்டபாணி மீண்டும் பள்ளியில் பணியாற்றுவதை விரும்பாத நிர்வாகி ரெகுபதி, பள்ளியை மூடிவிட முடிவு செய்து மாணவ மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ்களை முன் தேதியிட்டு கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கியுள்ளார்.
இதையடுத்து பள்ளி பூட்டப்பட்டது குறித்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவின்படி நேற்று மாலை கோட்டாசியர் திருமால் மற்றும் வருவாய்த் துறை கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையின் பூட்டை உடைத்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை பள்ளிக் கட்டடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கோட்டாட்சியர் திருமால் காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி தலைமறைவான பள்ளி நிர்வாகி ரெகுபதியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் தேத்தாக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.