நாகை அருகே பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்த மூவர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் பொறையாரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். இரவு தாமதமாக பணி முடித்தவர்கள் மற்றும் அதிகாலைப் பணிக்கு செல்வோர் என 11 பேர் பணிமனையில் நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை சுமார் மூன்று மணியளவில் மேற்கூரை இடிந்து விழந்தது. இதில் சிக்கிய ஊழியர்கள் மரண ஓலமிட்டனர். ஆனால், அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு வர யாருமில்லை. தகவலறிந்து சிறிது நேரம் கழித்து வந்த பிற ஊழியர்கள், தீயணைப்புப் படையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் பிரேம்குமார், நடத்துநர் செந்தில் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடிபாடு சம்பவம் குறித்து பேசிய ஓட்டுநர் ப்ரேம்குமார், “தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிகாலை 3 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அரை மணி நேரம் இடிபாடுக்குள் சிக்கித் தவித்தோம். எங்களுடன் மற்ற நடத்துநர்கள், ஓட்டுநர்கள், நிர்வாக அதிகாரிகள், மெக்கானிக் உள்ளிட்டோர் சிக்கிக்கொண்டனர். பிறகு வெளியில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சத்தம் வரும் இடங்களை கேட்டு எங்களை மீட்டனர்” என்று கூறினார். இடிபாடு சம்பவம் குறித்து கூறிய நடத்துநர் செந்தில்குமார், “இடிபாடுகளுக்குள் சிக்கியபோது மூச்சுவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்திகொண்டிருந்தோம். என்று உருக்கமாக கூறினார்.