செய்தியாளர்: என்.விஷ்ணுவர்தன்
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. இது இன்று வரை நீங்கா வடுவாக பலருக்கும் இருக்கிறது.
இந்த சுனாமியின்போது பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
ஆனால் கட்டிக் கொடுக்கப்பட்ட சுனாமி நிரந்தர வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
‘வீடுகள் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து வருகின்றன. எனவே எங்களின் வீடுகளை அரசு புணரமைத்து தர வேண்டும்’ என்பது அங்கு வாழ்ந்த நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை செல்லூர் சுனாமி குடியிருப்பில் கொத்தனார் வேலை பார்க்கும் விஜயகுமார் என்பவர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மின்விசிறியும் கீழே விழுந்ததால், அங்கே உறங்கிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த விஜயகுமாரின் மனைவியை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேதமான வீடுகளால் மீண்டும் உயிரிழப்பு ஏற்படாதவாறு, அங்குள்ள வீடுகளின் தரத்தை அரசு உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.