பெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு நூதன முறையில் காற்றை மட்டும் நிரப்பி மருந்தில்லா ஊசிப்போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சந்துரு. இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ரோவர் உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சந்துருவிடம் வந்த மர்ம நபர் ஒருவர், உனது கையில் ஏற்பட்டுள்ள தோல் பிரச்னைக்கு உனது அப்பா ஊசிப் போடச் சொன்னார் என்று கூறி, தனியே அழைத்துச்சென்று ஊசிப் போட முயன்றுள்ளார். அதற்கு என் அப்பாவிடம் கேட்டுக்கொண்டு பிறகு போட்டுக்கொள்கிறேன் என்று சந்துரு கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது செல்போனில் இருந்து யாரோ ஒருவருக்கு போன் செய்து கொடுத்து, உன் அப்பா கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார் என்று கூறி போனை சந்துருவிடம் கொடுத்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் கையில் உள்ள தோல் பிரச்னைக்கு ஊசி போட்டுக்கொள் என்று கூறியுள்ளார். அவரது குரல் சந்துருவுக்கு தெளிவாகவும், சரியாகவும் கேட்கவில்லையாம். இதனால் போனில் பேசுபவர் தனது தந்தை கிருஷ்ணமூர்த்திதான் என்று நினைத்த சந்துரு ஊசிப் போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளார். இதனையடுத்து சந்துருவை அருகே கட்டுமானப்பணிகள் முடியால் பாதியில் உள்ள கட்டடத்திற்கு அழைத்துச் சென்ற மர்ம நபர், சந்துருவுக்கு ஊசியில் மருந்து ஏற்றாமல் வெறும் காற்றை மட்டும் நிரப்பி ஊசிப் போட்டுவிட்டு சில நொடிகளில் தப்பிச் சென்று விட்டார்.
இதனையடுத்து பேருந்தில் ஏரி சந்துரு தள்ளாடிய படியே வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் என்ன என்று விசாரித்த போது அப்பா சொன்ன தன் பேரில் ஒருவர் மருந்தில்லாமல் வெறும் ஊசிப் போட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது அம்மா புஷ்பா போன் செய்து சென்னைக்கு சென்றுள்ள கிருஷ்ணமூத்தியிடம் விசாரித்த போது, அப்படி யாரையும் ஊசிப் போடுமாறு சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சந்துருவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனையத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்துரு பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் இருக்கும் சந்துருவிற்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெரம்பலூர் அரசு மருத்துவனை மருத்துவர்கள் கூறும்போது, இந்தச் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. சினிமாவில் வருவது போல, மர்ம நபர் ஒருவர் காற்றை மட்டும் நிரப்பி ஊசிப் போட்டுள்ளார். இது ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி இதயத்திற்கும், மூளைக்கும் செல்லும் ரத்தத்தை தடுக்கும். அதனால் மரணம் ஏற்பட்டு விடும். மருத்துவ தொழில்நுட்பம் தெரிந்த ஒருவர்தான் இதனை செய்திருக்க வேண்டும். இருப்பினும் சந்துருவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூதன முறையில் பள்ளி மாணவனுக்கு காற்றை மட்டும் நிரப்பி, மருந்தில்லா ஊசிப் போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.