ராமநாதபுரத்தில் அண்ணா சிலைக்கு வெள்ளைத்துணியால் மாஸ்க் போல அணிவித்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சு.பா.தங்கவேலன் தனது சொந்த செலவில் அறிஞர் அண்ணாவிற்கு சிலை வைத்தார். இந்த சிலையை தற்போதைய திமுக தலைவர் முக.ஸ்டாலின் 2010ல் துணை முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்.
இந்நிலையில் அறிஞர் அண்ணாவின் சிலையில் மர்மநபர் ஒருவர் வெள்ளைத்துணியைக் கொண்டு சிலையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மூடியுள்ளார். தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் அதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்லும் போதும், பொது வெளியிலும் முகக்கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தகவல் அறிந்த போலீசார் அண்ணா சிலைக்கு மாஸ்க் அணிந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மர்மநபர் ஒருவர் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு வெள்ளைத்துணியால் மாஸ்க் அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.