கோவையில் இன்று ஒரே நாளில் 4 கோயில்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயில்களின் முன்பு பழைய டயருக்கு தீ வைத்துள்ளனர்.
கோவை டவுன்ஹால் என்.எச். சாலையில் உள்ள மாகாளியம்மன் கோயில், ரயில் நிலையம் முன்பாக உள்ள விநாயகர் கோயில், கோட்டைமேடு பகுதியில் உள்ள விநாயகர் கோயில், கவுண்டம்பாளையம் நல்லாபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் ஆகிய 4 கோயில்கள் முன்பாக பழைய டயர்களை தீ வைத்தும், கோயில் முன்பாக உள்ள பொருட்களை தீ வைத்து சேதப்படுத்தியும் இருந்தது.
இன்று அதிகாலை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி, பா.ஜ.க அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாகாளியம்மன் கோயில் முன்பாக குவிந்தனர். பின்னர் அங்கு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊர்வலமாக கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்றனர். அங்கு தீ வைத்து எரிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து விட்டு, தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் “கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய நபர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இதுபோன்று கோயில்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து காவல் துறையினர் கணக்கு காட்டுவதைப் போல இந்த முறையும் நடந்து கொள்ளக்கூடாது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே என்.எச். சாலையில் மாகாளியம்மன் கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளில் ஒருவர் பழைய டயர்களை கோயில் முன்பாக தூக்கி வைத்து தீ வைத்து எரிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
மேலும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்தும் , ஒரே நபர் 4 இடங்களிலும் இந்தச் செயல்களை செய்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்