தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து 2005-ல் மாயமான தமிழில் முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட சிறப்புக்குரிய பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் ஓலைச் சுவடிகள் காகிதச் சுவடிகள் உள்ளன. இதில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு பைபிளை தேடும் பணி நடந்து வந்தது. இது குறித்து அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை இருந்தாச்சு கட்டிக்கு வந்து அங்கு உள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், லண்டனில் இந்த புதிய ஏற்பாடு பைபிள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் பைபிளை தமிழத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பைபிள் மீட்கப்பட்ட பிறகு தஞ்சைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.