இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். அதுவும் இந்து - முஸ்லிம் மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பல நெகிழ்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறி வருவதை நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில், ஐய்யனார் கோயிலுக்காக தன்னுடைய சொந்த நிலத்தை முஸ்லிம் முதியவரை ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்திருக்கிறது. அதன்படி, கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சுவைஃபு (75) என்ற விவசாயி. இவருக்கு காஞ்சிரங்குடி மேல வலசை கிராமத்தில் உள்ள பொன்னு சிறையெடுத்த ஐய்யானார் கோயிலுக்கு செல்லும் வழியில் நஞ்சை நிலம் இருந்திருக்கிறது.
அந்த ஐய்யனார் கோயிலுக்கு செல்ல சுவைஃபுவின் நஞ்சை நிலத்தை தவிர வேறு பாதை இருந்திருக்கவில்லை. இதனால் பல காலமாக மேலவலசை கிராமத்து மக்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்துவதும் வாடிக்கை. ஆகையால் கோயிலுக்கு செல்ல பாதையை வழங்குமாறும் மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களது இன்னலை உணர்ந்த முகமது சுவைஃபு தன்னுடைய நிலத்தில் இருந்து 8 சென்ட் இடத்தை ஐய்யனார் கோயில் பாதைக்காக தானமாக வழங்கியிருக்கிறார்.
இதேபோல, காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்காவிலிருந்து கிழக்கு முத்தரையர் நகர் செல்லும் வழியில் பாதை இல்லாததால் கிராமத்தினர் கடற்கரை ஓரமாகவே சென்று வந்திருக்கிறார்கள்.
இதனையறிந்த அந்த முஸ்லிம் விவசாயி பொது மக்களின் பயன்பாட்டுக்காக 15 சென்ட் நிலத்தை கொடுத்திருக்கிறார். கோயிலுக்காகவும், பொதுமக்களுக்காகவும் தன்னுடைய சொந்த நிலத்தை தானமாக வழங்கிய முகமது சுவைஃபுவின் இந்த செயலுக்கு கீழக்கரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து பேசியிருக்கும் முகமது சுவைஃபு, “ஐய்யனார் கோவிலுக்கு மக்கள் சிரமமில்லாமல் வந்து செல்வதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் தலைமுறையினர் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.