மன இறுக்கத்தை போக்க இசையே அருமருந்து
ஸ்வரங்கள் ஏழு என்றாலும் அதன் இசைவடிவங்கள் கோடி.. இத்தனை இசைவடிவங்கள் வெளிவந்தாலும் இசைக்கும் கருவிகள் அடிப்படையில் 3 வகையே. தோல், கம்பி, காற்றுக் கருவி என முக்கருவிகளே இசை அருவியாய் பாய்கின்றன.
இசைக்கருவிகளின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்தும் வகையில் சேலத்தில் கண்காட்சி நடைபெற்றது. சேலம் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் பிற்பகல் மூன்று மணி வரை இந்தக்கண்காட்சி நடைபெற்றது. ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மிருதங்கம், தவில், பறை, உறுமி, பம்பை, உடுக்கை உள்ளிட்ட தோல் கருவிகளும், நாதஸ்வரம், புல்லாங்குழல், பழங்கால கொம்பு ஊதி உள்ளிட்ட காற்று கருவிகளும் இடம்பெற்றிருந்தன. வீணை, தம்புரா, வயலின் போன்ற கம்பிக்கருவிகளும் இடம்பெற்றன. தற்போது பயன்பாட்டில் இல்லாத புல்புல் தாரா, யாழ் உள்ளிட்ட கம்பி கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இசை மும்மூர்த்திகள் தொடங்கி பழங்கால கர்நாடக இசைக் கலைஞர்கள், திரை இசைக் கலைஞர்கள் என அனைத்து வரலாற்று தகவல்களும் இடம்பெற்றிருந்தது. இசையின் ஸ்வர வரிசை, ஆதித்தாள ஜதி, தத்தகார சொற்கள் என இசையின் அடிப்படைத் தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது. இசையை முறையாக பயின்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறினார் இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன்.
மன இறுக்கத்தை, தளர்த்தும் அருமருந்து இசை ; அந்த இசை தொடர்பான தகவல்கள் அடங்கிய இந்த கண்காட்சி பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவத்தை அளித்திருக்கும் என்பதே நிதர்சனம் ...