கோயம்பேட்டில் அண்ணனை கொலை செய்த சிறுவனை பழிவாங்கிய தம்பி தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (17). மே மாதம் தனது காதலியை கிண்டல் செய்த கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த கணேஷ் (23) என்பவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே நின்றிருந்த விக்னேஷை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்க கணேஷின் தம்பி பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, கோயம்பேடு மேட்டுக்குளத்தை சேர்ந்த பிரகாஷ், மோகன், அஜித், மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த ஆரோக்கியம், திருவேற்காட்டை சேர்ந்த சாரதி, ஆகிய 5 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் இன்று அதிகாலையில் இறந்து போனார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.