தேனி மாவட்டம் மேகமலை அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்து தாக்க முயன்ற "அரிக்கொம்பன்" யானை குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் மேகமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மலைக்கிராம மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்களால் பகுதியில் 10 பேரை பலி கொண்ட "அரிக்கொம்பன்" யானை, கடந்த 30 ஆம் தேதி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் செண்டுசெல்லப்பட்டு தேக்கடி பெரியார் புலிகள் காப்பக அடர்ந்த வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த யானை தமிழக வனப்பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேகமலை அருகே இரவங்கலாறு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
யானையின் கழுத்தில் மாட்டப்பட்ட ரேடியோ காலர் சிக்னல் மூலம் ஹைவேவிஸ் பகுதிகளில் அதன் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு மேகமலை செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் “ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் பொதுமக்களின் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களின் வாகனம் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேவையின்றி யாரும் வெளியே நடமாட வேண்டாம்; இரவு நேரத்தில் முற்றிலும் வெளியே வர வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக வனத்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர். 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மேகமலை பகுதியில் முகாமிட்டு ரேடியோ காலர் உதவியுடன் அரிக்கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹைவேவிஸ் பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து தாக்க முயன்ற அரிக்கொம்பன் யானை குறித்த வீடியோ தற்போது வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்படி தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு 08.30 மணிக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு, மேகமலை வழியாக ஹைவேவிஸ் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்து குபேந்திரன் காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் அரிக்கொம்பன் சர்வ சாதாரணமாக சென்று கொண்டிருந்துள்ளது. இதனால் அரசு பேருந்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அரிக்கொம்பன் யானை பேருந்தை நோக்கி வேகமாக திரும்பி வந்து தாக்க முற்பட்டது. பின்னர் ஏதும் செய்யாமல் அங்கிருந்து கடந்து சென்றுள்ளது.
இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் படபடப்புடன் எடுத்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சர்வ சாதாரணமாக யானை உலா வருவது அதிகரித்துள்ளதால் மேகமலை, இரவங்கலார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மலைக்கிராம மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.