”முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டது முல்லைப்பெரியாறு அணை” - இடுக்கி மக்கள் ஆர்ப்பாட்டம்

”முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டது முல்லைப்பெரியாறு அணை” - இடுக்கி மக்கள் ஆர்ப்பாட்டம்
”முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டது முல்லைப்பெரியாறு அணை” - இடுக்கி மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வெள்ள அபாய எச்சரிக்கையில் ஏற்கெனவே இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீரோட்டப் பாதைகள், முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘ஒவ்வொரு முறை நீர் திறப்பின்போதும் எச்சரிக்கை விடுக்க வேண்டுமென்பது அவசியமில்லை’ என பொதுப்பணித்துறையினர் விளக்கம் கூறியுள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 30-ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு நான்காவது முறையாக 142 அடியை எட்டியது. அதற்கு முன்னதாகவே மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கைக்காக ஆற்றங்கரையோர மக்கள் (அணை நீர்மட்டம் 142 அடியை நவம்பர் 30-ம் தேதி தொடும் எனக் கருதி, அணையின் உபரி நீர் வெளியேறும் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புதரை ஆகிய பகுதிகளில் இருந்த மக்கள்) அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

கணித்தபடியே அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் உபரி நீர் கேரளாவிற்குள் வெளியேற்றப்படத் தொடங்கியது. ஆனால் சில இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறாமல் இருந்ததால், அவர்கள் சிக்கலுக்கு உள்ளாகினர். குறிப்பாக நீர் வெளியேறிய இடத்தையொட்டியுள்ள (வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியார்) பகுதியிலுள்ள 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவில்லை.

மட்டுமன்றி, அவர்கள் ‘முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது’ எனக்கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத்தை தொடர்ந்து, இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் மக்கள் வெளியேற மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னணியில், வழக்கமாக உள்ள பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்கும் போதெல்லாம் அதன் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் வசிக்கும் 140 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வெளியேறாமல் தொடர்ந்து அடம்பிடித்து வருவது வழக்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை குறிப்பிட்டு, ‘எச்சரிக்கை விடுக்கப்பட்டும் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் இருந்தனர். ஆனால், தமிழக பொதுப்பணித்துறையினர்தான் முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்ததுவிட்டதாக கூறுகின்றனர்’ என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக முல்லைப்பெரியாறு அணையில் நீர் நிரம்புகையில்,"ரூல் கர்வ்" முறைபடி அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படுவது வழக்கம். இம்முறையும் அப்படி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 142 அடிக்கும் மேல் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு தரப்படும். அப்படியும் நீர் தேக்கம் அதிகமாகும்போது, மீதமுள்ள அனைத்து கன அடி நீரும் கேரளாவிற்குள் திறந்து விடப்படும். இப்படியான சூழல்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். இதன்படியே இன்று அதிகாலை நீர்வரத்து அதிகமாக இருந்ததால், முல்லைப்பெரியாறு அணையின் பத்து மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்கு நீர் (2,500 கன அடி தண்ணீர்) வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் நீர்வரத்து குறைந்ததும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது அணைக்கேற்ப, கேரளாவிற்கு 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இப்படியாக நீர் இருப்புக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு அமைகிறது. ஆகவே ஒவ்வொரு முறை கேரளாவிற்கு மதகுகள் திறக்கும் போதெல்லாம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். “ஒரேகட்டமாக கேரளாவின் உபரி நீர் செல்லும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அந்தவகையில், அப்பகுதிகளுக்கு இம்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதிகள் அதன்கீழ் தான் உள்ளன” எனவும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் தரப்போ, எல்லாமுறையும் தெரிவிக்க வேண்டுமென கூறுகின்றனர். இந்த முரணில்தான் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இன்று அதிகாலை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதற்கு, மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் தரப்பில், ‘முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது’ எனக்கூறப்பட்டு, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வண்டிப்பெரியாறு பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கேரள போலீசார் சார்பிலும் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக “முல்லைப் பெரியாறு அணையின் நீரோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களாகிய நீங்கள், ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கையின்கீழ் இருக்கின்றீர்கள். இப்போதும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல், இங்கேயே இருந்து நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல” என்றுகூறி, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ரமேஷ் கண்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com