ஈரோட்டில் இருந்து முகிலனை காண சென்னை வந்துகொண்டிருந்த அவரது மனைவி கார் விபத்தில் முகிலன் மனைவி லேசாக காயமடைந்தார்.
காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 140 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார். இரவு 9.45 மணியளவில் முகிலனை காவல்துறையினர் அழைத்து வரும் வீடியோ வெளியான நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் முகிலனை பார்த்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் ஆந்திர ரயில்வே போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் முகிலன் காட்பாடி ரயில்வே காவல்நிலையத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.
பின்னர் 12.40 மணியளவில் முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அதிகாலை 1.30க்கு முகிலனை அழைத்துக்கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை புறப்பட்டனர். தற்போது சென்னையில் சிபிசிஐடி காவல்துறையினர் முகிலனை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகிலனை காண அவரது மனைவி பூங்கொடி, ஈரோடு சென்னிமலையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். அவர் வந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் பூங்கொடி லேசான காயம் அடைந்துள்ளார். அதனையடுத்து அவர் வேறொரு காரில் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார்.